முன்பெல்லாம் ஒரு நல்ல காட்சியைப் பார்த்தால், தானாக என் கைகள் கேமராவைத் தேடும். இல்லையேல் குறைந்தபட்சம் இதனை பின் ஒரு நாள் வந்து புகைப்படம் எடுக்கவேண்டும் என மனதில் குறித்தாவது வைத்துக்கொள்வேன்.
கடைசியக 2019ல் நான் DSLR-ஐ தூக்கிக்கொண்டு கல்யாணத்தில் போட்டோ எடுத்த ஞாபகம். அதன்பின் ஒரேயடியாக வீடியோ பக்கம் தாவிவிட்டேன். காரணம், என் பால்ய சினேகிதன் எப்போடா சினிமாட்டோகிராபர் ஆகப்போற? என என்னுள் தூங்கிக்கொண்டிருந்த ராஜர் டீக்கின்ஸை தட்டி எழுப்பிவிட, அன்று முதல் சென்ற மாதம் வரை பித்துப் பிடித்தாற்போல் வீடியோ மட்டுமே எடுத்துக்கொண்டிருந்தேன்.
வேளச்சேரி சிக்னலில் பிச்சைக்காரருக்கு 20ரூபாய் போட்டுவிட்டு அற்ப அதப்பில் அவரைக் கடக்கும் பூமர் அங்கிளைப் போல்தான் இப்போதெல்லாம் ஒரு நல்ல காட்சியைப் பார்த்தால், “ம்ம்.. நல்லருக்குல frame-u” என பகுமானமாய் கடந்துவிடுகிறேன். போட்டோ எடுக்க தோன்றுவதில்லை. “இந்த போட்டோ எடுப்பதுலாம் small boys-ஓட வேலை” என அடிக்கடி நினைப்பதும் உண்டு. நாம வீடியோகிராபர், நாமெல்லாம் ஒசத்தி என்ற வக்கிர வர்ணாசிரம புத்தியும் அப்பப்போ வந்துபோகும். இதற்கு முக்காவாசி காரணம் என்னுடைய அதப்பு தான் என்றாலும் காவாசி காரணம் போட்டோவை விட வீடியோவில் இருக்கும் நுட்பங்களும் working variables-களும் அதிகம் என்பதும், photographer-ஐ விட videographer-கள் தான் அதிகம் காசு வாங்குகிறார்கள் என்ற அற்ப புத்தியும் தான்.
ஒரு காலத்தில் போட்டோ எடுக்கையில் மற்றவர்களுக்கு சிக்காத பல விஷயங்கள் எனக்கு மட்டுமே சிக்கவேண்டும் என “மூஞ்சிக்கி முன்னாடி முடிய தொங்கவிட்டு இரு கண்களையும் வேகமாக இடது/வலது என ஆட்டிப் பார்க்கும் அந்நியன் விக்ரம்” போல் தேடிக்கொண்டிருந்த காலம் போய், நடக்கும் நிகழ்வுகளை அலட்டிக் கொள்ளாமல் அப்படியே ஆவணப்படுத்தும் ஒரு வாழ்ந்து கெட்ட வீடியோகிராபராக வியாபித்துவிடுவேனோ என்ற இருத்தலியல் நெருக்கடி இப்போதெல்லாம் வருகிறது.
நல்வாய்ப்பாக ஒரு நாள் திட்டக்குடியில் வெறும் candid photography மட்டும் தான் தேவை என, ஒரு requirement வரவே, ஆகா வந்தது டா ஆப்பர்ச்சுனிட்டி என பழைய நினைவுகளைத் தேடி சைக்கிளில் செல்லும் சேரனைப் போல், வண்டியைக் கட்டிக்கொண்டு நானும் என்னுடைய டீமும் சென்றோம்.
அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் அம்மாவைப் பார்க்கையில் உள்ளிருந்து உவகைக் கொள்ளும் மழலைப் போன்று தான் ஒரு நல்ல புகைப்படம் எடுத்தபின் எனது மனமும் உவகைக் கொள்ளவேண்டும் என நினைப்பேன். அந்த உவகையே ஒவ்வொரு கலைஞனையும் அவனது படைப்பாற்றலையும் உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளும் என நான் நம்புகிறேன்.
சரி அதை விடுங்கள்.
3 வருடங்கள் கழித்து நானெடுத்த திருமண புகைப்படங்கள் தாம் இவை. இன்று போட்டோ எடுக்கும் 2K Kids-களைப் போல் கவர்ச்சிகரமாகவோ அல்லது “வ்வேரே லெவெல் புரோ” படைப்புகளாகவோ இவை இல்லாமல் இருக்கலாம், ஆனால் இப்புகைப்படங்கள் யாவும் இவற்றை உருவாக்கிய என்னையும், அப்படைப்பில் வாழும் மனிதர்களயும் உவகையடையச் செய்துள்ளன.
[envira-gallery id=”704″]